ஆர்எம்கே 12 எனப்படும் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் செலவின உச்ச வரம்பில் மேலும் 1,500 கோடி வெள்ளி உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது மூலம் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் செலவின உச்ச வரம்பு, 41 ஆயிரத்து 500 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.இன்று தொடங்கிய சிறப்பு மக்களவைக்கூட்டத்தில் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் மத்திய கால மறு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதீத முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கு நிர்வாக நடைமுறைகளின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.