இன்று பிரதமர் தலைமையேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை பதவிகள் மறுசீரமைப்பு தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகம்மட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
முன்னதாக, புத்ரா ஜெயாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய உடனேயே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் அமைச்சரவை மறுசீரமைப்பை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆருடங்கள் வலுத்த நிலையில், நேற்று பிரதமர் அதனை மறுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் பிரதர் அறிவித்திருந்தபடி, மலேசிய தேசியப் பல்கலைக்கழகமான உகஎம்இல் துன் டாக்டர் இஸ்மாயில் இருக்கையை நிறுவுவது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முகம்மட் காலிட் நோர்டின் இன்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
மலேசியாவின் முன்னேற்றத்திற்கு துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் இரஹ்மானின் பங்களிப்பை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் அந்த இருக்கையை அடுத்த மாதம் நிறுவுவதாகவும், நாட்டின் பன்முக சமூகத்தின் ஒற்றுமையில் அந்த இருக்கை கவனம் செலுத்தப்படும் நோக்கில் உருவாக்கப்படுவதாகவும் காலிட் நோர்டின் மேலும் சொன்னார்.








