இவ்வாண்டிற்கான அதிகாரப்பூர்வ மலேசிய தினக் கொண்டாட்டங்கள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி சரவாக் மாநிலத்தின் பிசிசிகே எனப்படும் போர்னியோ மாநாட்டு மையம் கூச்சிங்கில் நடைபெறும் என அரசாங்க செய்தித் தொடர்பாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாஹ்மி ஃபாட்சீல் அறிவித்துள்ளார்.
தேசிய அளவிலான கொண்டாட்டத்தை நடத்துவதற்குத் தேவையான இடவசதியும் திறனும் பிசிசிகேவுக்கு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மலேசியத் தினக் கொண்டாட்டமானது பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது.
இதனிடையே, வரும் ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் புத்ராஜெயாவில் மெர்டேக்கா கொண்டாட்டங்கள் நடைபெறுவதையொட்டி, பிரசாரானா மலேசியா பெர்ஹாட், 24 மணி நேர பொது போக்குவரத்து சேவையை வழங்கும் என்றும் ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பொதுமக்கள் புத்ராஜெயா சென்று மெர்டேக்கா அணிவகுப்பைக் காணவும், கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் எளிதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








