புத்ராஜெயா, செப்டம்பர்.30-
நம்பிக்கை மோசடி, சட்டவிரோதப் பணமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானை விடுதலை செய்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக பிராசிகியூஷன் தரப்பு தெரிவித்துள்ளது.
அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, சட்டத்துறை அலுவலகம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப, மேல்முறையீட்டு விண்ணப்பம், கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ வான் ஷாஹாருடின் வான் லாடின் தெரிவித்தார்.
இந்த மேல்முறையீடு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூவார் எம்.பி.யான சையிட் சாடிக்கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறை, இரண்டு பிரம்படித் தண்டனை மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதத்தை கடந்த ஜுன் 25 ஆம் தேதி அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்தது.








