அலோர் ஸ்டார், அக்டோபர்.22-
கூலிம் தாமான் செனாங்கில் தீபாவளிப் பண்டிகை அன்று நடந்த பட்டாசு விபத்திற்கு காரணமானதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூலைச் சேர்ந்த 34 வயதுடைய ஆடவரையும், லூனாஸின் ஜாலான் பாயா பெசாரைச் சேர்ந்த 23 வயதுடைய ஆடவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
200 ரிங்கிட் மதிப்புள்ள ‘kelapa’ என்ற பட்டாசை வாங்கி, அதனை சிலிண்டர் ஒன்றில் வைத்து, பற்ற வைத்தது தான், இவ்விபத்து ஏற்படக் காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இப்பட்டாசு விபத்தில், 22 பேர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் தலையில் படுகாயத்துடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இச்சம்பவம் வெடிபொருள் சட்டம் 1958, பிரிவு 8 மற்றும் தண்டனை சட்டம் பிரிவு 326 -ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.