நேற்று வெள்ளிக்கிழமை ஈப்போ, ஜெலாபாங், லோரோங் ஜெலாபாங்கில் உள்ள தனது வீட்டில் மார்பகப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்த கிடந்த முதியவரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்று போலீசார் உறுதிச் செய்தனர்.
75 வயதுடைய அந்த முதியவர், தனது வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி, சொந்தமாகவே சுட்டுக் கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த முதியவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு சவப் பரிசோதனை செய்யப்பட்டதில் குற்றத்தன்மைக்கான எந்தவொரு தடயமும் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் அந்த முதியவரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஏசிபி அபாங் ஸைனால் விளக்கினார்.
கடந்த 30 ஆண்டு காலமாக வேட்டைத் துப்பாக்கிக்கான லைசென்ஸைக் கொண்டுள்ள அந்த முதியவர், புற்று நோய் நான்காவது படிநிலையில் அவதியுற்று வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.








