ஜோகூர், குளுவாங் பகுதியில் கார் மற்றும் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்ததுடன், அவர்களது இரண்டு மகள்கள் படுகாயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தில், 54 வயதான மிஸ்லான் ஒஸ்மான் ஓட்டிச் சென்ற ஹியுண்டாய் மேட்ரிக்ஸ் கார், சாலையில் நிலவிய வழுக்கும் தன்மை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை பாதைக்குள் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்போது கஹாங் நோக்கிச் சென்ற 34 வயதான நபர் ஓட்டிய லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதலில் காரை ஓட்டிச் சென்ற மிஸ்லான் ஒஸ்மான் மற்றும் அவரது 49 வயது மனைவி நோர் அஸிலா ஏ ரஹ்மான் ஆகியோர் தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரின் பின்புற இருக்கையில் இருந்த அவர்களது 24 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகள்களும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் குளுவாங், என்சே பெசார் ஹாஜ்ஜா கால்சோம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முஹமட் நோ தெரிவித்துள்ளார்.








