மலாக்கா, ஆகஸ்ட்.26-
ஆடவர் ஒருவரை வெட்டுக் கத்தியால் தாக்கிக் காயம் விளைவித்ததாகக் கூறப்படும் திருநங்கை ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த திருநங்கையை விசாரணைக்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த திருநங்கை, உள்ளூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவரை வெட்டுக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவரைத் தாக்கிய பின்னர் சம்பந்தப்பட்ட திருநங்கை பண்டார் ஹிலிர் போலீஸ் நிலைத்திற்குத் தானே நேரடியாகச் சென்று தகவல் தெரிவித்து, சரண் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் போலீசார், சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டி அனுப்பப்பட்டு, அந்த ஆடவர் காப்பாற்றப்பட்டு, மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு உதவினர்.
கோலாலம்பூரைச் சேர்ந்த அந்த திருநங்கை, ஏற்கனவே பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








