கோலாலம்பூர், நவம்பர்.04-
11 மாத கைக்குழந்தையாக இருந்த போது தனது மகள் பிரசன்னா டிக்சாவைத் தூக்கிக் கொண்டு, தலைமறைவாகி விட்ட தமது முன்னாள் கணவர் கே. பத்மநாபனைக் கண்டுபிடித்து, தனது மகளை மீட்பது தொடர்பில் தனித்து வாழும் தாயாரான எம். இந்திராகாந்தி, நீதிக் கேட்டு, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வரை வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஊர்வலமாகச் செல்லவிருக்கிறார்.
தமது மகளைக் கண்டுபிடிப்பதில் எந்தவொரு நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான இந்திராகாந்தி, போலீசாரின் போக்கை ஆட்சேபிக்கும் வகையில் நீதி கேட்டு இந்த பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த ஊர்வலத்தின் போது, தமது மகள் பிரசன்னாவுக்கு மிக விருப்பமான கரடி பொம்மையைப் போலீசாரிடம் ஒப்படைக்கப் போவதாக மலேசிய ஆகம அணி ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்திராகாந்தி இதனை அறிவித்தார்.
பிரசன்னாவைக் கண்டுபிடிப்பது தொடர்பில் கூட்டரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனுவின் பத்திரத்தையும் போலீஸ் படைத் தலைவரிடம் ஒப்படைக்கவிருப்பதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார்.








