கோலாலம்பூர், நவம்பர்.18-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது 4 வயது மகள், தற்போது தனது தந்தையுடன் துபாயில் உள்ளார் என்பதற்கான போதுமான ஆதரங்கள் தெளிவாக இருந்தும், போலீஸ் துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்குழந்தையின் தாயார் தேவித்ரா குற்றஞ்சாட்டுகிறார்.
நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப கடந்த 2023 ஆம் ஆண்டு தனது மகள் கிறிஷா கண்ணனைப் பார்ப்பதற்கு வந்த தனது கணவர், அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டதாக தேவித்ரா கூறுகிறார்.
தனது கணவரால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தையைத் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவை தேவித்ரா பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை அமல்படுத்துவதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் போலீஸ் துறை உறுதிப்படுத்தியிருந்தது.
ஆனால், இதுவரை போலீஸ் துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்து குழந்தையின் தாயார் தேவித்ரா கேள்வி எழுப்பியுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் R. ரேணுகா ராமையா தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தந்தை செய்து கொண்ட மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்த போதிலும் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இண்டர்போல் போலீசாரிடம், போலீஸ் துறை எந்தவொரு நோட்டீசையும் இன்னும் சார்வு செய்யவில்லை என்று ரேணுகா குறிப்பிட்டார்.
நோட்டீஸ் சார்வு செய்யப்படாமல் அனைத்துலக போலீஸ் துறையினரால் எதுவும் முடியாது என்று ரேணுகா தெரிவித்தார்.








