கோலாலம்பூர், ஜனவரி.19-
மலேசிய ஆயுதப்படை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 'Ops Parasit' மற்றும் 'Ops Star' நடவடிக்கைகள் குறித்த விசாரணை அறிக்கையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்தது.
மேல் நடவடிக்கை மற்றும் அடுத்தக் கட்ட உத்தரவுகளுக்காக இந்த விசாரணை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் குறித்த பரிந்துரைகளையும் எஸ்பிஆர்எம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்த அடுத்தக் கட்ட முன்னேற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் கொள்முதல் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான விசாரணையில், இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் நான்கு மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 23 பேரை எஸ்பிஆர்எம் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.








