ஷா ஆலாம், அக்டோபர்.15-
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 16 வயது மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டாம் படிவ மாணவன், கொலை உணர்ச்சியைக் கொண்டிருந்தான். அவனிடம் கொலை நோக்கம் இருந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த மாணவியைக் கொல்லும் நோக்கிலேயே அன்றைய தினம் செயல்பட்டுள்ளான் என்பது சந்தேகிக்கப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
அந்த மாணவியின் உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக்கள் பாய்ந்துள்ளன. கொலை வெறியுடன், அந்த மாணவன் இருந்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த மாணவி மீது அந்த மாணவன் ஆசை கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்த மாணவன் தனது உணர்வை வெளிப்படுத்தாமலும், பகிர்ந்து கொள்ளாமலும் இருந்து வந்துள்ளான்.
இருவரும் வெவ்வேறு வகுப்புகள் மற்றும் வயது வித்தியாசம் கொண்டவர்கள். தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அதே வேளையில் அந்த மாணவியைக் கொல்வதற்கு அந்த மாணவன், கத்திகளை ஓன்லைன் மூலம் வாங்கியுள்ளான். அவன் எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளனர் என்று டத்தோ ஷாஸெலி கஹார் குறிப்பிட்டார்.








