Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கூலாயில் மின்னல் எஃப்எம் ‘கலப்படம்’ ரோட்ஷோ: 1,000-க்கும் மேற்பட்டோர் வருகை
தற்போதைய செய்திகள்

கூலாயில் மின்னல் எஃப்எம் ‘கலப்படம்’ ரோட்ஷோ: 1,000-க்கும் மேற்பட்டோர் வருகை

Share:

ஜோகூர் கூலாயில், தி கம்யூன் லைஃப்ஸ்டைல் மால் மண்டபத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற மின்னல் எஃப்எம்-மின் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை மற்றும் கலாச்சார நிகழ்வான ரோட்ஷோ, 1,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து மிக விமரிசையாக நடந்து முடிந்தது.

இவ்விழாவைத் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கலை மற்றும் கலாச்சாரத்தின் வழி சமூக உறவுகளை வலுப்படுத்தும் இத்தகைய ரோட்ஷோ நிகழ்ச்சிகளுக்குத் தங்களின் ஆதரவை அவர் தெரிவித்தார்.

தகவல் தொடர்பு அமைச்சு, ஆர்.டி.எம். ஆகியவற்றுடன் இணைந்து மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலப்பட நிகழ்ச்சியில் அதன் அறிவிப்பாளர்கள் மற்றும் பிரபல கலைஞர்களுடன், கூலாயைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

மேடை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவப் பரிசோதனை முகப்பிடம், மித்ரா விளக்க கூடம், பெக்கா, எம்சிஎம்சி போன்ற அரசாங்க ஏஜென்சிகளும் தங்களின் முகாம்களை அமைத்து மக்களுக்கான தகவல் சேவையை வழங்கின.

மின்னல் எஃப்எம் வானொலி இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருவதன் மூலம், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு பாலமாகத் திகழ்வதோடு, பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டையும் வளர்த்து வருகிறது என்று நிகழ்விற்கு தலைமையேற்ற துணை அமைச்சர் தியோ நி சிங் புகழாரம் சூட்டினார்.

தி கம்யூன் லைஃப்ஸ்டைல் மால்-இல் நடைபெற்ற இந்த ‘கலப்படம்’ நிகழ்வு மக்களுக்கு நல்விருந்தாக அமைந்ததோடு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு பயனுள்ள தளமாகவும் அமைந்தது.

தவிர மாற்றுத் திறனாளிகள் மற்றும் வசதி குறைந்த ஐவருக்கு துணை அமைச்சர் தியோ தலைமையில் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜோகூர் மாநிலத்தேர்தலையொட்டி திசைகள் சஞ்சிகையின் சிறப்பு வெளியீட்டையும் துணை அமைச்சர் தியோ நி சிங் ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்தார்.

Related News