மாற்று வழிகாட்டிச் செயலிகள் போதிய திறனைப் பெற்றால், வேஸ் செயலியின் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று அம்பாங்கில் உள்ள தாமான் நிர்வானா அல்-முஸ்தாகிம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றுச் செயலிகளின் திறனை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார்.
வேஸ் இஸ்ரேலைத் தளமாகக் கொண்டிருப்பதாலும், அதன் ஒப்பந்தம் அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டிருப்பதாலும், தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அக்டோபர் 21 முதல், அரசாங்கப் பணிகளின்போது அரசு ஊழியர்கள் வேஸ் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கிய உள்ளூர் செயலியான தூஜுவுக்கு மாறுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.








