சிகாமட், ஆகஸ்ட்.29-
ஜோகூர், சிகாமட்டில் இன்று விடியற்காலையில் மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 4.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவுச் செய்யப்பட்டது.
இந்த நில நடுக்கம் சிகாமட் நகரிலிருந்து வட கிழக்காக 22 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் சிகாமட்டில் நில நடுக்கம் ஏற்பட்டு இருப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 8.59 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவாகியிருந்தது.
மூன்றாவது முறையாக சிகாமட்டில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தினால், அந்த நகர் தற்போது வானிலை ஆய்வுத்துறையின் மிகுந்த கண்காணிப்புக்குரியப் பகுதியாக மாறியுள்ளது.








