மலேசியாவின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அடுத்த சில நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தலைமையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகளும் இணைய பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.
அதேவேளையில், தேசிய வங்கியான பேங்க் நெகாரா தலைமையில் நாட்டின் அனைத்து நிதி நிறுவனங்களும் சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
மேலும், தேசியப் பாதுகாப்பு மன்றமான எம்கேஎன் தலைமையில், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்பு தேசியப் பாதுகாப்பு விளக்கக் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் நிகழ்ந்த அதிநவீன இணையத் தாக்குதல்கள் மற்றும் டிஜிட்டல் சேவை முடக்கங்கள் மலேசியாவுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அச்சுறுத்தல்களை மலேசியாவுக்கு வெகு தொலைவில் இருப்பதாகக் கருதிவிடக்கூடாது என்று நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, உடனடியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.








