பிரபல சமயப் போதகர் சையிட் ஷா இக்மால் சையிட் ஷைஃபுல் எனப்படும் டா’ய் சையிட், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இன்று அப்பீல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், இருவர் ஆதரவாகவும், ஒருவர் மாறுபட்ட கருத்துடனும் தீர்ப்பளித்ததால், 2-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகத்தை எழுப்புவதில் தற்காப்புத் தரப்பு வெற்றி பெற்றுள்ளதாக 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, டா’ய் சையிட்டுக்கு உயர் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஷா ஆலாம், ஐ-சிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 23 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பீல் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.








