பெர்கேசோவின் புதிய 24 மணி நேர பாதுகாப்புத் திட்டமான SKBBK-க்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள பெர்கேசோ அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான MTUC – எச்சரித்துள்ளது.
புதிய திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 0.75 விழுக்காடு கூடுதல் பங்களிப்பு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், தொழிலாளர் பிரதிநிதிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் MTUC கோரியுள்ளது.
MTUC பொதுச் செயலாளர் Kamarul Baharin Mansor கூறுகையில், குறைந்தபட்சம் 1,700 ரிங்கிட் சம்பளம் பெறும் ஊழியருக்கு இந்த 0.75 விழுக்காடு என்பது மாதத்திற்கு 12 ரிங்கிட் 75 சென் கூடுதல் சுமையாகும் என்றார்.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கூடுதல் பங்களிப்பு தொழிலாளர்களுக்கு நியாயமற்ற சுமையாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வந்த SKBBK திட்டத்தின் கீழ், வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கும் 24 மணி நேர சமூகப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 0.75 விழுக்காடாக இருக்கும் ஊழியர்களின் பங்களிப்பு, அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 விழுக்காடாகவும், ஆறாவது ஆண்டு முதல் 1.25 விழுக்காடாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.








