சிரம்பான், ஆகஸ்ட்.04-
சொந்தத் தந்தையால் கொலை செய்து, புதைக்கப்பட்டதாக நம்பப்படும் ஜோகூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் கொலைக்கு முக்கியக் காரணம், அந்தச் சிறுவனின் பராமரிப்பு உரிமை தொடர்பில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சையே முக்கியக் காரணமாகும் என்று நம்பப்படுகிறது.
இக்கொலை தொடர்பில் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவனின் 36 வயதுடைய தந்தையும், அவனது தாயாரும் விவகாரத்து செய்து கொள்வதற்கான நடைமுறையில் ஈடுபட்டுள்ள வேளையில், அவ்வாறு விவகாரத்து செய்து கொண்டால், சிறுவனின் பராமரிப்பு உரிமையை யார் ஏற்பது தொடர்பாக எழுந்த குடும்பச் சண்டையே கொலைக்கான காரணம் என்று நம்பப்படுவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் ஸாஃபிர் முகமட் யூசோஃப் தெரிவித்தார்.
கணவன், மனைவிக்கு இடையிலான விவகாரத்தில் ஆண் குழந்தை, இயல்பாகவே தாயாரின் பராமரிப்பு உரிமைக்கு விடப்பட்டு விடும் என்ற பொறாமையின் காரணமாக தனது மகன், அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவனை, சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
சிறுவன் புதைக்கப்பட்ட பட்ட நெகிரி செம்பிலான், ஜெம்போல் பகுதி அந்த நபருக்கு பரீட்சயமான பகுதியாகும். சிறுவன் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட அன்றே, தனது கணவனின் செயலில் மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம், மற்றும் அளித்த போலீஸ் வாக்குமூலமே அந்த சந்தேகப் பேர்வழியை அன்றைய தினமே கைது செய்வதற்கு வழி வகுத்தது.
சம்பந்தப்பட்ட நபர், இந்த வாரத்தில் நெகிரி செம்பிலான், பாஹாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








