ஜார்ஜ்டவுன், ஜனவரி.10-
ஆடம்பர பழவகைகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டு வரும் மூசாங் கிங் டுரியானின் விலை, கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்த நிலையிலும் கூட, எதிர்பார்த்த அளவிலான விற்பனை கிடைக்கவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கிலோ 20 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் கிலோ 60 ரிங்கிட் முதல் 80 ரிங்கிட் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வரும் திங்கட்கிழமை முதல் புதிய கல்வியாண்டு துவங்குவதால், குடும்பங்கள் அனைத்தும் பள்ளிச் செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக டுரியான் தோட்ட உரிமையாளர் தாங் பூன் லேய் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், டுரியானுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், நாடெங்கிலும் டுரியான் விற்பனையில், வியாபாரிகள் பெருகி விட்டதாகக், தேவைக்கு அதிகமாக டுரியான் விநியோகம் செய்யப்படுவதும், அதன் விலை வீழ்ச்சிக்கான காரணமாகப் பார்க்கப்படுகின்றது.
என்றாலும், டுரியான் விரும்பிகள் இந்த குறைந்த விலை காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தாங் பூன் லேய் தெரிவித்துள்ளார்.








