கடந்த ஆண்டு பண்டார் உத்தாமா பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 16 வயது மாணவி யாப் ஷிங் ஸுயேன் குடும்பத்தினர் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், அரசாங்கம் சட்டப்படியான நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்கும் என சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கானது கல்வி அமைச்சு தொடர்புடையது என்பதால், முழுமையான விவரங்கள் தமக்கு கிடைக்கவில்லை என்றும், எனவே தற்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் மற்றும் போலீஸ் வழக்கமான நடைமுறைகளின்படி செயல்படும் என்றும், ஏதேனும் அசாதாரண நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, யாப் ஷிங் ஸுயேனின் தாயாரும் சகோதரியும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
அரசாங்க அமைப்புகள், மாணவியை கொலை செய்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அந்த சிறுவன் உள்ளிட்ட பலர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாண்டிருந்தால், யாப்பின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.








