கோலாலம்பூர், நவம்பர்.08-
டிக் டாக் செயலி மூலம் போதைப் பொருள் கடத்தலுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, டிக் டாக் நிறுவனத்திடம் இது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
டிக் டாக்கில் அது போன்ற வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் பலரை, இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், குற்றச் செயல்களாகக் கருதப்படும் உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களை, டிக் டாக் நிர்வாகம், கண்காணிக்கும் வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குற்ற நோக்கங்களுக்காக இணையத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 இன் கீழ், கடுமையான குற்றமாகும் என்றும் எம்சிஎம்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே வேளையில், பொதுமக்கள் இது போன்று சமூக ஊடகங்களில் வரும் போலியான வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எம்சிஎம்சி வலியுறுத்தியுள்ளது.








