Dec 13, 2025
Thisaigal NewsYouTube
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் திசை திருப்ப வேண்டாம்: போலீஸ் துறைக்கு வழக்கறிஞர் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் திசை திருப்ப வேண்டாம்: போலீஸ் துறைக்கு வழக்கறிஞர் நினைவுறுத்து

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.13-

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்களைப் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் திசை திரும்பும் முயற்சியில் மலாக்கா போலீசார் ஈடுபடக்கூடாது என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இந்திய ஆடவர்களில் ஒருவரின் மனைவி என்று தன்னைக் கூறிக் கொண்ட ஜெயஶ்ரீ என்பவர் சட்டப்பூர்வமான மனைவி அல்ல என்றும் அவருக்கு பழைய குற்றப்பதிவுகள் உள்ளன என்றும் மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் இன்று திருவாய் மலந்திருப்பது தேவையற்ற ஒன்று என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முதல் நாள் அன்று செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியப் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் எழுப்பி வரும் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஊமையாக இருந்து வரும் மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார், திடுத்திப்பென்று அந்தப் பெண் சட்டப்பூர்வமான மனைவி அல்ல என்று வியாக்கியானப்படுத்தியிருப்பது உண்மையிலேயே விந்தையாக உள்ளது.

சம்பந்தப்பட்ட இந்தியப் பெண் சட்டப்பூர்வமான மனைவியோ அல்லது அவர் மீது குற்றப்பதிவுகள் இருக்கின்றனவோ என்பது அவசியம் இல்லாத ஒன்றாகும். அதற்கான தேவையும் இல்லை. ஆனால் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உண்மையிலேயே எங்கு நடந்தது, செம்பனைத் தோட்டத்திலா அல்லது நெடுஞ்சாலையிலா?

அந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களுக்குக் கைவிலகிடப்பட்டதா? இல்லையா? மூவரும் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்களா? இல்லையா? போன்ற கேள்விகளுக்குதான் மலாக்கா போலீஸ் தலைவர் பதில் சொல்ல வேண்டுமே தவிர சாட்சியம் அளிக்க வந்தப் பெண்ணின் பின்னணி குறித்து ஆராய்ச்சி தேவையில்லை.

இந்தக் கொலைச் சம்பவமானது, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட நடத்தையைப் பற்றிய கேள்வி அல்ல. மூன்று இந்திய இளைஞர்கள், மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அதற்குதான், மலாக்கா போலீசார் முதலில் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர அந்தப் பெண்ணின் நடத்தையைப் பற்றி அல்ல என்று வழக்கறிஞர் ராஜேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News