ஜாசின், ஜனவரி.25-
மலாக்கா, ஜாசின் அருகே உள்ள Nyalas, Felda Bukit Senggeh தோட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத 'ஏரியல்' வகை வெடிகுண்டு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அது குறித்து ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் கீ ராபர்ட் கூறுகையில், 53 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் செம்பனை மரங்களை மறுநடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடிகுண்டைக் கண்டெடுத்ததாகத் தெரிவித்தார்.
சுமார் 101.6 சென்டிமீட்டர் நீளமும், 66.04 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்ட அந்த குண்டு குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளி நேற்று நண்பகல் 12 மணியளவில் நியாலாஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மலாக்கா மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் ஜாசின் மாவட்ட போலீஸ் நிலையத்தின் ஆயுதப்பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது 226 கிலோ எடை கொண்ட 'UXO Aerial Bomb' வகை வெடிகுண்டு என்பது உறுதியானது. அந்த வெடிகுண்டு துருப்பிடித்திருந்தாலும், அது இன்னும் வெடிக்கும் தன்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுப்ரிடெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.








