கோலாலம்பூர், ஜனவரி.02-
புத்தாண்டை முன்னிட்டு, நாடு முழுவதும் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சாலைக் கண்காணிப்பு நடவடிக்கைகளில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 12 ஆயிரத்து 437 சம்மன்கள் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வேக வரம்பை மீறுதல், பாதுகாப்பு பட்டை அணியாமை, மது அருந்தி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில், இந்தச் சோதனைகளின் போது 390 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் போதைப் பொருள் சட்டத்திலும், 3 பேர் குற்றவியல் மற்றும் பிற சட்டங்களிலும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் யுஸ்ரி ஹசான் குறிப்பிட்டுள்ளார்.








