கோலாலம்பூர், பிப்ரவரி.21-
ஊழல் புகார்கள் தொடர்பில், முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு எதிராக முறையான புகார்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே பிகேஆர் கட்சியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் அப்புகார்களானது முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அப்படி ஒரு புகார் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து பிகேஆர் கட்சியானது விசாரணை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஃபிஸி ரம்லிக்கு எதிராக தற்போது இரண்டு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
'UEM Lestra’ நிறுவனத்தின் 750 மெகாவாட் அளவிலான மிகப் பெரிய தனியார் சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக கேப்ரிஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டும், இங்கிலாந்தைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான ARM Holdings உடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக மற்றொரு குற்றச்சாட்டும் ஆகும்.
இந்நிலையில், தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள இவ்விரு குற்றச்சாட்டுகளையும் ரஃபிஸி ரம்லி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








