கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
கோலாலம்பூர், ஸ்தாப்பாக், தாமான் மெலாத்தியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் இரண்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி வீடுகளிலிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களில் ஒன்று பகடிவதைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கோலாலம்பூர் தார் கல்லூரியின் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இந்த இரு சம்பவங்களும் நிகழ்ந்துள்ள வேளையில் உயிரிழந்த 22 வயது மாணவியின் தாயார், தனது மகள் பகடிவதைக்கு ஆளாகியுள்ளார் என்று போலீசில் புகார் செய்துள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
53 வயதுடைய அந்தத் தாயார் இன்று பிற்பகல் 1.57 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக மாணவியான தனது மகள், இறப்பதற்கு முன்பு பகடிவதைக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளதாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று ஃபாடில் மர்சுஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.








