பந்திங், செப்டம்பர்.09-
சிலாங்கூர் மோரிப் கடற்கரையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தைப் பாதுகாத்து மாநிலப் பாரம்பரியத் தளமாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு முன்மொழிந்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் அதாவது 1945 ஆம் ஆண்டு ஆபரேஷன் ஜிப்பர் நடவடிக்கையின் போது மோரிப்பில் தரையிறங்கிய வீரர்களின் பாரம்பரியத் தருணத்தை நினைவுக்கூறும் வகையில் இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்டது.
மலேசிய ஆயுதப்படை இந்திய வீரர்கள் சங்கத்தின் சிலாங்கூர் பாரு பிரிவு ஏற்பாடு செய்த 80வது ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பாப்பாராய்டு, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ்-இந்திய துருப்புக்கள் செய்த தியாகங்களை நினைவுக்கூறும் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த நினைவுச் சின்னம் விளங்குகிறது என்றார்.
இதனால்தான் இந்த நினைவுச் சின்னம் பராமரிக்கப்பட்டு மாநில பாரம்பரிய தளமாக அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதன் வழி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரேஷன் ஜிப்பர் நடவடிக்கை மற்றும் நமது வீரர்களின் தியாகங்கள் எதிர்கால சந்ததியினரால் எப்போதும் நினைவுகூரப்படும் என்றார் அவர்.
பந்திங்கில் உள்ள மோரிப் கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நேபாளம் மற்றும் இந்தியா தூதர்கள், கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.








