கிளந்தான், கோத்தா பாருவில் இருந்து சிலாங்கூர் கோம்பாக் வரையிலான கிழக்குக் கரையோர ரயில் இணைப்புத் திட்டமான இசிஆர்எல் ரயில் சேவையின் முதல் கட்டப் பணிகள் 97 புள்ளி 66 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் பள்ளி விடுமுறையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ரயில் இணைப்பு நிறுவனமான எம்ஆர்எல்லின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் இதனைத் தெரிவித்தார்.
மொத்தம் 665 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மின்மயமாக்கப்பட்ட இசிஆர்எல் ரயில் பாதையின் பணிகள் கடந்த மாத நிலவரப்படி 95 புள்ளி 41 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.
கோத்தா பாரு-கோம்பாக் இடையிலான முதல் கட்டப் பணிகள் டிசம்பர் மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சேவை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
முதல் கட்டத்தின் மொத்த நீளம் 520 கிலோமீட்டராகும். கோம்பாக் முதல் போர்ட் கிள்ளான் வரையிலான இரண்டாம் கட்டப் பணிகள் 2027 டிசம்பரில் நிறைவடைந்து, 2028 ஜனவரியில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 25-ஆம் தேதி கோம்பாக்கில் இருந்து கோத்தா பாரு வரை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் நடத்தப்பட்ட சோதனைப் பயணத்தில், 520 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 3 மணி 19 நிமிடங்களில் கடந்து சென்றதாக டார்விஸ் தெரிவித்தார்.








