1எம்.டி.பி விவகாரத்தில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான கணக்குப்படி, அசல், வட்டி மற்றும் சட்டக் கட்டணங்கள் உட்பட மொத்தம் 42.5 பில்லியன் ரிங்கிட் கடனை மத்திய அரசாங்கம் செலுத்தியுள்ளதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 2039-ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையவிருக்கும் 8.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சுக்குக் ஐ.எம்.டி.என் இஸ்லாமிய நடுத்தர காலக் கடன் பத்திரங்களுக்கும் அரசே பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம் 1எம்.டி.பி கடன்களுக்காக மலேசிய அரசு ஏற்க வேண்டிய மொத்தப் பொறுப்பு 51.4 பில்லியன் ரிங்கிட்டாகும்.

அதே வேளையில், முறைகேடு நடந்துள்ள 1எம்.டி.பி நிதி மற்றும் சொத்துகளில் இருந்து இதுவரை 31.3 பில்லியன் ரிங்கிட்டை அரசு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம், இனிவரும் காலங்களில் கூடுதல் நிதி மீட்கப்படாவிட்டாலும், அரசு இன்னும் 20.1 பில்லியன் ரிங்கிட் நிகரக் கடன் பாக்கியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், ஜோ லோ மற்றும் அனைத்துலக நிதி நிறுவனங்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டது.
நாடாளுமன்ற மக்களவையின் கூட்டத்தொடரில் சரவாக் ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சியெங் ஜென், / 1ம்.டி.பி கடன்கள் மற்றும் மீட்கப்பட்ட சொத்துகளின் விபரம் குறித்து எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு நிதி அமைச்சு மேற்கண்டவாறு பதிலளித்தது.








