கோலாலம்பூர், ஜனவரி.09-
மலேசியாவின் கட்டுமானத் துறையில் புதிய மைல்கல்லாக, ஒரே துண்டிலான மிக நீண்ட கூரைப் பலகையை நிறுவியதற்காக யுனைடெட் சீசன்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி (United Seasons Sdn Bhd - UniSon) நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
சிலாங்கூர், ரவாங்கில் அமைந்துள்ள YLL Supply Chain Hub கட்டுமானப் பணியில், 166.49 மீட்டர் நீளமுள்ள ஒரே கூரைப் பலகையை UniSon நிறுவனம் வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது. இது மலேசியாவிலேயே மிக நீளமான ஒரே துண்டிலான கூரைப் பலகை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ரவாங்கில் நடைபெற்ற விழாவில், இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் UniSon நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் P. Dhanabalan மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
இந்தச் சாதனை குறித்துப் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பெ. தனபாலன், "COLORBOND எஃகினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கூரைப் பலகைகள், KAWA KZ400 Standing Seam Roofing System தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாகக் கூரை மட்டத்திலேயே வடிவமைக்கப்பட்டன. இது கசிவுகள் இல்லாத மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய கட்டுமானத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.








