குவாந்தான், அக்டோபர்.07-
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பெய்த கனத்த மழை மற்றும் புயல் காற்று காரணமாக குவாந்தான் ரவூப்பில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கம்போங் மெலாயு செம்பாலிட், தாமான் அமாலினா லெஸ்தாரி மற்றும் ஜாலான் லிப்பிஸ் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக ரவூப் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
என்றாலும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே வேளையில், தாமான் பெருமாஹான் காலிங், கம்போங் காலிங் மற்றும் ஜாலான் ஸ்டேடியம் உள்ளிட்ட பகுதியில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக குவாந்தான் ஓசிபிடி உதவி ஆணையர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








