கோலாலம்பூர், செராஸில் உள்ள அனைத்துலக இளைஞர் மையம் இன்டெர்னேஷ்னல் யூத் சென்டரில் சிறு – நடுத்தர தொழில்முனைவர்களுக்கான தெக்குன் நேசனல் கடனுதவித் திட்டங்கள் விளக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நாடு தழுவிய நிலையில் தற்கால – எதிர்கால தொழில்முனைவர்களுடன் தொடர் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு இருக்கும் ஐயங்கள் குறித்து தெளிவைக் கொடுத்து வருகிறது தெக்குன் நேஷனல்.
நாட்டின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் தெக்குன் நேஷனல் வாயிலாக ஸ்பூமி எனப்படும் இந்தியத் தொழில்முனைவர் கடனுதவித் திட்டத்திற்கு 30 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 மில்லியன் வெள்ளியை கூடுதல் நிதியாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
பல்வேறு பிரிவின்கீழ் இந்தியத் தொழில் முனைவர்களுக்காக கடனுதவிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தெக்குன் நேஷனலின் தேசியத் தலைவர் டத்தோ அப்துல்லா சானிஅப்துல் ஹாமிட் தமதுரையில் குறிப்பிட்டார்.
தொழில்முனைவர்களுக்கு எழும் ஐயங்களுக்கு விளக்கம் கொடுக்க பேரா மாநில தெக்குன் நேஷனல் அதிகாரி சிவராஜ் கலந்து கொண்டு பல அரிய தகவல்களை வழங்கினார். அடிப்படை ஆவணங்கள், கடனுதவி பெறும் வழிமுறைகள், விண்ணப்பங்கள் பரிசீலனை, கடனுதவி வரையறை, கடன் தொகை, பிரிவுகள், திருப்பிச் செலுத்தும் முறைகள், ஊராட்சி மன்ற உரிமங்கள் ஆகியவற்றோடு சில தொழில்முனைவர்களுக்கு ஏற்பட்டுள்ள தங்களின் வியாபாரம் சார்ந்த தனிப்பட்டக் கேள்விகளுக்கும் சிவராஜ் உட்பட இன்னும் சில தெக்குன் நேஷனல் அதிகாரிகளும் விளக்கமளித்தனர்
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தெக்குன் நேஷனலின் அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன, அங்கு நேரடியாக வரும் பொது மக்களுக்கு விண்ணப்ப பாரங்கள், உரிய தகவல்கள் போன்றவை வழங்கப்படும் எனவும் சிவராஜ் மேலும் குறிப்பிட்டார்.
மாலை தேநீருடன் நடத்தப்பட்ட இச்சந்திப்புக் கூட்டத்திற்கு பிரதமரின் அரசியல் செயலாளருடைய சிறப்பு அதிகாரி ஜோனதன் வேலா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரும் 200க்கும் மேற்மட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும், ஏறத்தாழ 100 தெக்குன் கடனுதவி விண்ணப்ப பாரங்களும் இச்சந்திப்புக் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது.








