ஷா ஆலாம், டிசம்பர்.15-
அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஆல்பெர்ட் தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாக அவரின் மனைவி அளித்துள்ள புகார் தொடர்பில் அரச மலேசியப் போலீஸ் படை விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி, வர்த்தகர் ஆல்பெர்ட் தே- வைப் பூச்சோங்கில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள், அந்த வர்த்தகரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அவரின் மனைவி லீ பெய் ரீ போலீசில் புகார் செய்துள்ளார்.
எனினும் கணவனும், மனைவியும் தற்போது வெளியில் இருப்பதாக அறியப்படுவதால், அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலத்தையும் போலீசாரால் பதிவுச் செய்ய முடியவில்லை என்று சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட தரப்பினர், விசாரணைக்கு உதவும் வகையில் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் விசாரணைக்கு உதவ முன் வந்து இருப்பதாகவும் டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டுள்ளார்.
இன்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஷாஸெலி இதனைத் தெரிவித்தார்.
வர்த்தகர் ஆல்பெர்ட் தே மற்றும் அவரின் மனைவி ஆகியோர் விசாரணைக்கு உதவ முன்வந்து இருப்பதையும், இது தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டு இருப்பதையும் டத்தோ ஷாஸெலி சுட்டிக் காட்டினார்.








