கோலாலம்பூர், நவம்பர்.26-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் எவ்வித அச்சமின்றி விசாரணை செய்ய வேண்டும் என்று ஜசெக கேட்டுக் கொண்டுள்ளது.
லஞ்ச ஊழலில் ஈடுபட்டார் என்று கூறப்படும் அந்த முன்னாள் செயலாளர் சம்பந்தப்பட்ட விவகாரம் மீதான விசாரணை அச்சம், பாரபட்சம் அல்லது எவ்வித ஐயமின்றி நடத்தப்பட வேண்டும் என்று ஜசெக தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் யியோ பீ யின் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் முன்னாள் செயலாளருக்கு எதிராக எஸ்பிஆர்எம் விசாரணை நடத்துவதை ஜசெக வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு தலையீடு மற்றும் நெருக்குதலின்றி ஷாம்சுல் இஸ்கண்டார் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சபாவில் சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் ஒரு வர்த்தகரான ஆல்பெர்ட் தே என்பவரிடம் 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஷாம்சுல் இஸ்கண்டாரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று அறிவித்தார்.








