கோலாலம்பூர், ஜனவரி.09-
மலேசியர்களின் மிகுந்த கவனிக்கத்தக்க வழக்காக பார்க்கப்பட்ட துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி மீதான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில், மேல் நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தி, வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ள சட்டத்துறை அலுவலகத்தின் முடிவு குறித்து ஜசெக சட்டப்பிரிவுத் தலைவர் ராம் கர்ப்பார் சிங் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அம்னோ தலைவருக்கு எதிரான இந்த வழக்கில் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று முன்னாள் சட்டச் சீர்திருத்த துணை அமைச்சருமான ராம் கர்ப்பால் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஸாஹிட்டுக்கு எதிரான 47 லஞ்ச ஊழல் வழக்கை விசாரணை செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், ஸாஹிட்டுக்கு எதிரான இந்த வழக்கைத் தொடரும் அளவிற்கு வழக்கில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாகக் கூறி, அவரை எதிர்வாதம் புரிவதற்கு உத்தரவிட்டது.
நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு அடிப்படையிலான ஆதாரங்களைச் சட்டத்துறை அலுவலகம் மீண்டும் ஆய்வு செய்ததா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ராம் கர்ப்பால் வலியுறுத்தினார்.
விரிவான ஆய்வுக்குப் பின்னரே ஸாஹிட்டுக்கு எதிரான இந்த வழக்கைக் கைவிடப்படுவதற்கு தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக சட்டத்துறை அலுவலகம் கூறினாலும், எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன என்பதைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்கு சட்டத்துறை அலுவலகம் தவறி விட்டது என்று ராம் கர்ப்பால் குற்றம் சாட்டினார்.
நாட்டின் உயரிய பொறுப்பில் இருப்பவர் மீதான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் இவ்வளவு எளிதாகக் கைவிடப்படுவது, நாட்டின் சட்ட மேலாண்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைக்கு முரணானது என ராம் கர்ப்பால் வாதிட்டார்.
இவ்வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுஏரா, சட்டத்துறை அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஸாஹிட்டுக்கு வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு அனுமதித்த போதிலும், 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்பதை ராம் கர்ப்பால் நினைவுறுத்தினார்.
இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஆதாரங்களைத் தேடுவதற்கு வழிவிடும் வகையிலேயே ஸாஹிட்டை வழக்கிலிருந்து தற்காலிமாக விடுவிக்க விசாரணை நீதிபதி அனுமதித்தார்.
இந்நிலையில் ஸாஹிட்டுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடத்திய விரிவான கூடுதல் விசாரணைகளுக்குப் பிறகு, குற்றச்சாட்டுகளைத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று AGC முடிவு செய்து இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது என்ற ஒரு வழக்கறிஞரான ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.
அப்படியென்றால், ஸாஹிட்டுக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திங்கள் உள்ளன என்று உயர் நீதிமன்றம் எடுத்த முடிவுக்கு சட்டத்துறை அலுவலகம் என்ன விளக்கத்தை அளிக்கப் போகிறது என்று ராம் கர்ப்பால் மிகக் காட்டமாக வினவியுள்ளார்.








