கோத்தா பாரு, செப்டம்பர்.24-
வயது குறைந்தவர்கள் மத்தியில் இருவரின் விருப்பதின் பேரில் நடக்கும் பாலியல் உறவு குற்றச்செயல்களில் ஆண்களைத் தண்டிப்பதைப் போல இந்த உறவுக்கு உடந்தையாக இருக்கும் பெண்களையும் தண்டிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கிளந்தான் மாநில பாஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது போன்ற குற்றச்செயல்களில் ஆண்களை மட்டும் தண்டிப்பதற்கு நடப்பு சட்டம் வகை செய்கிறது. எனினும் அந்த ஆண் அத்தகையத் தவற்றைச் செய்வதற்கு உடந்தையாக இருக்கும் வயது குறைந்த பெண்ணையும் தண்டிப்பதற்கு ஏதுவாக நடப்பு குற்றவியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் கிளந்தான் மாநில தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஸ்ரி மாட் டாவுட் வலியுறுத்தியுள்ளார்.
கிளந்தான் மாநிலத்தில் வயது குறைந்தவர்கள் மத்தியிலான பாலியல் உறவு குற்றச் செயல்களில் 90 விழுக்காடு இருவரின் இணக்கத்தின் பேரில் நடைபெறுகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்டுள்ள பெண்ணும் தண்டிக்கப்படுவதற்கு ஏதுவாக நடப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசோஃப் மாமாட் முன்வைத்துள்ள பரிந்துரையை பாஸ் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.








