நெகிரி செம்பிலான் சாலை போக்குவரத்துத் துறையான JPJ, ஹரி ராயா பெருநாள் கால போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ட்ரோன் கண்காணிப்பு மூலம் 30 நிமிடங்களில் அவசரப் பாதையைத் தவறாகப் பயன்படுத்திய 20-க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கண்டறிந்துள்ளது. ஓப் ஹரி ராயா நடவடிக்கையின் கீழ் இதுவரை 135 விதிமீறல்கள் பதிவாகி, பிடிபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர்கள் அவசர காலப்பாதையைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு, விழிப்புணர்வு இல்லாமை அல்லது போக்குவரத்து ஏற்பாடுகளில் ஏற்பட்ட குழப்பத்தையே முக்கியக் காரணமாகக் கூறுகின்றனர் என்று நெகிரி செம்பிலான் JPJ இயக்குநர் முகமது ஹாஸ்னோர் கூட்டிக் தெரிவித்தார்.
'ஸ்மார்ட் லேன்' வழித்தட வசதி முடிவடைந்த பிறகும், அது தங்களுக்குத் தெரியாது என்றும், அடையாளக் குறிகளைக் கவனிக்கவில்லை என்றும் கூறி அவர்கள் தொடர்ந்து அந்தப் பாதையில் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவே அவ்வாறு செய்ததாகச் சிலர் கூறினாலும், அவசர காலப்பாதை என்பது ஆம்புலன்ஸ் போன்ற அவசரத் தேவைகளுக்கே ஒதுக்கப்பட்டது என்றும், அதனைத் தவறாகப் பயன்படுத்துவது உண்மையான அவசர உதவி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.








