ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.06-
பினாங்கு பாலத்தில் இன்று காலையில் கார் ஒன்று திடீரென்று தீப் பிடித்துக் கொண்டதில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் பினாங்கு பெரு நிலப் பகுதியிலிருந்து தீவுக்குச் சென்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் காலை நேர போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஸ்தம்பித்தன. பலர் வேலைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சுமார் ஐந்து நிமிடத்தில் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கார் 90 விழுக்காடு சேதமுற்றது என்ற போதிலும் யாரும் காயம் அடையவில்லை.
சாலையில் நடுவில் கைவிடப்பட்ட அந்தக் காரை அகற்றி, வாகனப் போக்குவரத்து நெரிசலைச் சரிப்படுத்துதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது. பலர் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.








