கோலாலம்பூர், ஜனவரி.09-
நாட்டின் அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி லஞ்ச ஊழலில் ஈடுபடுவது குறித்து, பொதுமக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு முழு உரிமை உண்டு என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க இயந்திரத்தின் முதுகெலும்பாக விளங்கும் அமலாக்கப் பிரிவினர், நேர்மையற்ற முறையில் செயல்படும்போது அதனை விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. மக்கள் வழங்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் எவரும் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதக்கூடாது என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
சீருடை அணிந்த பணியாளர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ லஞ்சத்தில் திளைப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. பதவியைப் பயன்படுத்திச் சுய லாபம் தேடுபவர்கள் நாட்டின் இறையாண்மைக்குச் செய்யும் துரோகிகள் என மாமன்னர் சாடினார்.
மக்கள் தெரிவிக்கும் நியாயமான புகார்களை அலட்சியப்படுத்தக் கூடாது. லஞ்ச ஊழல் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மிக விரைவாகவும், பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மலேசியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதிகாரிகளின் முறைகேடுகளைத் தைரியமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் சமூகமே ஒரு தேசத்தின் உண்மையான காவலன் என்று அவர் புகழாரம் சூட்டினார்.








