பாயான் லேபாஸ், ஜூலை.19-
1எம்.டி.பி நிதி மோசடி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் லோ தயெக் ஜோ எனப்படும் ஜோ லோ, ஆஸ்திரேலியா நாட்டின் போலிப் கடப்பிதழைப் பயன்படுத்தி சீனாவின் ஷங்ஹாய் பகுதியில் வசித்து வருவதாக வரும் செய்திகளை மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் பெறவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்பதால் உள்துறை அமைச்சருடன் கலந்து பேசுவதாக இன்று காம்ப்லெக்ஸ் மடானி தெலுக் கும்பார் கல்நாட்டு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், சர்வதேச ஊடகங்களில் நேற்று இரவு வெளியான தகவல்களில், ஜோ லோ ஷாங்ஹாயில் உள்ள உயர்சேதிப் பகுதியான “கிரின் ஹில்ஸ்” பகுதியில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் எனவும், அவர் தற்போது சீன அரசுக்கு மூத்த ஆலோசகராக வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல், ‘ஃபிண்டிங் ஜோ லோ: லிவ் வித் ப்ராட்லி ஹோப் & டோம் ரைட்’ எனும் யூடியூப் நிகழ்ச்சியில், 1எம்.டி.பி மோசடிக்கான பின்புலங்களை ஆராய்ந்த பத்திரிகையாளர் ப்ராட்லி ஹோப் மற்றும் டோம் ரைட் ஆகியோரால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








