காஜாங், ஆகஸ்ட்.14-
காஜாங்கில் பெண் ஒருவர் கத்தியுடன் ஆவேசமாக நடத்திய தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.
பண்டார் காஜாங்கில் நடந்த இந்தச் சம்பவத்தில் காயமுற்ற 21 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அறுவரில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், மேலும் நால்வர் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றுள்ளனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
தாம் செலுத்திய வெள்ளை நிறக் காரில் மோட்டார் சைக்கிள்களை மோதிய பின்னர், தன்னை அணுகிய மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கத்தியால் தாக்கிய 24 வயதுடைய அந்த மாது, சீன நாட்டுப் பிரஜை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
பொதுமக்களின் உதவியுடன் வளைத்துப் பிடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் காரின் கதவை திறந்து வெளியே வந்து கத்தியை ஏந்தியவாறு பொதுமக்களை அச்சுறுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமுற்றன. அந்தப் பெண்ணின் காரிலிருந்து போலீசார் இரண்டு கத்திகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் அந்த வெளிநாட்டுப் பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி நாஸ்ரோன் மேலும் கூறினார்.








