கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
தனது இரு மகன்களின் சொத்துக்கள் குறித்து பேசியுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது பதில் அளித்துள்ளார்.
தனது இரு மகன்களை விசாரணை செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், எந்த சமயத்திலும் அவர்களின் சொத்துக்கள் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டவை என்று கூறவில்லை என்று துன் மகாதீர் வாதிட்டார்.
அது மட்டுமின்றி தனது மகன்களான டான் ஶ்ரீ மொக்ஸானி மற்றும் மிர்ஸான் ஆகியோர் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்கப்பட்டதில் எஸ்பிஆர்எம் மனநிறைவு கொள்கிறது என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவித்து இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
மொக்ஸானியின் சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட் என்றும், அவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 316 மில்லியன் ரிங்கிட் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிர்சான் சொத்துக்களின் மொத்த மதிப்பு 246.2 மில்லியன் ரிங்கிட் என்றும், தனிப்பட்ட சொத்துக்களின் மதிப்பு120 மில்லியன் ரிங்கிட் என்றும் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
துன் மகாதீரின் இரு புதல்வர்களின் சொத்துக்கள் நியாயமற்ற, சட்டவிரோமாகச் சம்பாதிக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடமே திருப்பித் தர வேண்டும் என்று கடந்த வாரம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறியிருந்தது தொடர்பில் துன் மகாதீர் இன்று எதிர்வினையாற்றியுள்ளார்.








