Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தோட்டத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்குத் தொழிற்சங்கம் தொடர்ந்து போராடும்- டத்தோ ஜி. சங்கரன் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தோட்டத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்குத் தொழிற்சங்கம் தொடர்ந்து போராடும்- டத்தோ ஜி. சங்கரன் உறுதி

தோட்டத் தொழிலாளர்கள் நலன் சார்ந்த அம்சங்களைப் பாதுகாப்பதில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வரும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் தெரிவித்தார்.

அதே வேளையில் இனம்,மதம், மொழி முதலிய பின்னணி பாராமல் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பும், அனுசரணையும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை திரெங்கானு, கெமாமானில் டி’பிஞ்சாய் மண்டத்தில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் திரெங்கானு மாநிலத்தின் 13 ஆவது பிரதிநிதிகள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ சங்கரன் இதனைத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட பாக்கிச் சம்பளத்திற்கு ஈடாக மற்றொரு பாக்கிச் சம்பளத்தைப் பெற்றுத் தருவதற்கு தொழிற்சஙகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சங்கரன் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கத்திற்கு, உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களின் பிளவுப்படாத ஆதரவை வழங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டத்தோ சங்கரன், உறுப்பினர்கள் பிள்ளைகள் போதைப்பொருள், மின் சிகரெட் போன்றவற்றுக்கு உந்தப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே வேளையில் பிள்ளைகளின் கல்வி நலனுக்கு அங்கத்தினர்கள் அதிக முன்னுரிமை வழங்கி வரும்படி கேட்டுக் கொண்ட அவர், உயர்கல்விக்கூடக் கல்வி வாய்ப்பினைப் பெறும் அங்கத்தினர்களின் பிள்ளைகளுக்குத் தொழிற்சங்கத்தின் பிபிஎன் கல்வி அறவாரியத்தின் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் என்றார்.

திரெங்கானு மாநில தலைவர் மசுக்கி பின் நரலா தலைமையில் மாநில செயலாளர் யுவனேஸ்வரன் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பேராளர்கள், பார்வையாளர்கள், அரசாங்க இலாகாக்களின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் என சுமார் 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →