கோத்தா கினபாலு, செப்டம்பர்.20-
மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், கலந்து கொண்ட ‘மைனர் சாட்சி’-யின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்ததையடுத்து, இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“ஸ்டூடண்ட் A” என அடையாளம் காணப்பட்ட அந்த மைனர் சாட்சியின் வழக்கறிஞரான ராம் சிங், நேற்று மாலை 4 மணியளவில் லுயாங் காவல் நிலையத்தில் தனது புகாரைப் பதிவுச் செய்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை, கோத்தா கினபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில், சம்பந்தப்பட்ட மைனர் சாட்சியின் தகவல்கள் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இவ்விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் தனது மைனர் சாட்சி அளித்த வாக்குமூலம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாகவும் ராம் சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.








