தமது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி இவ்வளவு விரைவில் மறைவார் என தாம் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
மறைவதற்கு முந்தைய நாள் இரவு தமது மனைவி நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும், மறுநாள் அவர் உயிரிழப்பார் என தாம் நினைக்கவில்லை என்றும் மகாதீர் கூறினார்.
சித்தி ஹஸ்மாவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக தமது இல்லத்திற்கு வந்த பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லாவிடம் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.
அப்போது ஆறுதல் தெரிவித்த பகாங் சுல்தான், “அல்லாஹ் துன் ஹஸ்மாவை அதிகம் நேசித்துள்ளார். துன், நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று மகாதீரிடம் கூறினார்.
100 வயதில் மறைந்த சித்தி ஹஸ்மாவுக்கு புத்ராஜெயா தேசிய நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
1956 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மகாதீர்–சித்தி ஹஸ்மா தம்பதியினர் 70 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர்.








