புத்ராஜெயா, பிப்ரவரி.26-
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.டி.எம், தொலைக்காட்சியில் BOSS எனும் ஹிந்தித் திரைப்படத்தை ஒளிபரப்பியதில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மலேசிய அரசாங்கத்திற்குச் சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையாளரான Supreme Broadcast International நிறுவனம் கோரிய இழப்பீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதி Evrol Mariette Peters தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் , வாதியான Supreme Broadcast International நிறுவனம் தரப்பில் 30,000 அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதற்கான முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியது. மேலும், ஒரு திரைப்படத்தின் வரலாற்றுச் செலவை மட்டும் வைத்து இழப்பீடு கோருவது சட்டப்படி செல்லாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் அரசாங்கத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், வழக்குச் செலவாக 50,000 ரிங்கிட்டை அரசுக்கு வழங்குமாறு திரைப்பட விநியோக நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆர்.டி.எம்-ன் செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தை நேரடியாகப் பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், திரைப்பட விநியோக நிறுவனத்திற்கும் ஆர்.டி.எம்-க்கும் இடையே முறையான ஒப்பந்தங்களோ அல்லது தகவல் பரிமாற்றங்களோ முன்னதாக நடைபெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினர். இதன் மூலம் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தத் திரைப்பட உரிமை தொடர்பான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.








