கோம்பாக், அக்டோபர்.16-
கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 225 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இந்தக் கடத்தல் கும்பல், கிளந்தானிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு போதைப்பொருளைக் கடத்தி வருவதில் கடந்த ஓராண்டு காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எல்லைப் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் கெத்தாமின் வகையைச் சேர்ந்த போதைப்பொருளைக் கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகிப்பதில் முக்கிய நபர்களாக இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கடந்த இரண்டு நாட்களில் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் இந்த கும்பல் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் யாவும் பத்துகேவ்ஸில் உள்ள ஒரு தரைவீடு மற்றும் வங்சா மாஜுவில் உள்ள ஓர் ஆடம்பர வீடு ஆகியவற்றில் கைப்பற்றப்பட்டதாக இன்று கோம்பாக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் ஓமார் கான் இதனைத் தெரிவித்தார்.








