கோலாலம்பூர், நவம்பர்.06-
அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன சம்பவம் தொடர்பில் அரசு தரப்பில் வழக்கை நடத்திய சட்டத்துறை அலுவலகத்தின் அதிகாரிகளுடன் நாளை வெள்ளிக்கிழமை சந்திப்பு நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இவ்விவருவரின் குடும்பத்திற்கும் அரசாங்கமும், போலீஸ்துறையும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து தகவல்களைத் துல்லியமாக பெறும் பொருட்டு சட்டத்துறை அலுவலகத்தின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் குடும்பத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட்டும், பாதிரியார் ரேய்மண்ட் கோ குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிஙகிட்டும் இழப்பீடாக வழங்கும்படி உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ சூ தியாங் ஜூ உத்தரவிட்டு இருந்தார்.
அரசாங்கமும் போலீஸ் துறையும் தங்களுக்கான சட்டப்பூர்வக் கடமைகளை மீறி விட்டதாகவும், அவற்றின் அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதாகவும் நீதிபதி நீதிபதி சூ தியாங் ஜூ குறிப்பிட்டார்.
அதே வேளையில் பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தப்பட்ட சம்பவத்தில் சேவையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அல்லது முன்னாள் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒருவர் அல்லது அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம். ஓர் உத்தரவின் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளதாக நீதிபதி சூ தியாங் ஜூ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








