கிள்ளான், ஜனவரி.03-
கிள்ளான், தாமான் எங் ஆன், ஜாலான் பெக்கான் பாருவில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து திருட முயன்ற இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதை வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜயராவ் உறுதிப்படுத்தினார்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில், ஜாலான் பெக்கான் பாருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்ததை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ரோந்துப் போலீசார், வீட்டின் பின்புற வாசல் வழியாகத் தப்பியோட முயன்ற இரண்டு உள்ளூர் நபர்களைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
போலீசார் அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த திருடர்களைச் சரணடையுமாறு எச்சரிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இது உண்மையான சம்பவம் தான் என்று போலீஸ் தரப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.








